அரச வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!



இலங்கை அரசாங்க சேவையில் 30,000 இளைஞர் மற்றும் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறியதாவது:" அரச வேலைகளுக்கான விளம்பரங்கள் தற்போது நிறைய செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை பெற்றுத் தருகிறோம். நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகின்றோம்."

அரசு சேவையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவும் உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 8 இலட்சம் பேருக்கு அவை கிடைக்காத நிலையில், அவர்களுக்காக 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியை சதொச ஊடாக 2500 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றன.

மேலும், அஸ்வெசும பெறாத ஒரு குழுவும் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அவற்றுக்கான விண்ணப்பங்களை எடுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் புதிய தேர்வு நடத்தி 400,000 குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.