இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்



இலங்கை முழுவதும் 2024/25 ஆம் ஆண்டில் பெரும்போக பருவத்தில் ஏற்பட்ட இரு வெள்ளங்களால் நெல் பயிர்கள் அழிந்துள்ளமையினால் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், தற்போது 8,50,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் 20% வரை விளைச்சல் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் நெல் வயல்களை சேதப்படுத்துவதால், விளைச்சல் மேலும் குறையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 லட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனுராத தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தினசரி அரிசி தேவையானது 6,500 மெட்ரிக் தொன் என்றும், ஆண்டுதோறும் 23,57,950 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் அரிசி களஞ்சியம் குறையுமானால், நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதோடு, அரிசி இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.