நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!



இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையை குறைக்குமாறு சகல பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அந்த அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்காதில்ஹானி, செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இருந்தபோதிலும், நாட்டின் சில பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்குக் கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, இது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில், பாடசாலைகளுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி, புத்தகப் பைகள் எடையை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை 15 முதல் 20 கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். அத்துடன் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரின் புத்தகப் பையின் எடை 2 கிலோவாக இருக்க வேண்டும். மேலும், இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரின் புத்தகப் பையின் எடை 3 கிலோவாக இருக்க வேண்டும். ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாக இருக்க வேண்டும். 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரின் புத்தகப் பையின் எடை 7 கிலோவாக இருக்க வேண்டும்.

இந்த பரிந்துரைகள் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.