புத்தாண்டை முன்னிட்டு தள்ளுபடி விலையில் அத்தியாவசியப் பொருட்கள்


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை தள்ளுபடி விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இது வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவின் அடிப்படையில் செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 5,000 ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய "பருவகால உணவுப் பொதியை" ரூ 2,500 க்கு வழங்குவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்காக, நிவாரணப் பலன்களை எதிர்பார்த்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களிடமிருந்து பொருத்தமான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 2025-04-01 முதல் 2025-04-13 வரை, நாடு முழுவதும் அமைந்துள்ள லங்கா சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு உணவுப் பொதி வழங்கப்படும்.

மேலும், தென்னை விவசாயிகளுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 50 கிலோகிராம் உரப் பொதியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு அறிவித்துள்ளது. இவ்வாறு, சந்தையில் 9,000 ரூபாய்க்கு கிடைக்கும் உரப் பொதியைக், சலுகை விலையில் 4,000 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

குறித்த விடயத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.